About

Friday 10 July, 2009

தமிழக ஆசிரியர்கள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி! ஆயிரம் பேர் நியமனம் செல்லாது என உத்தரவு


தமிழக அரசு நடத்திய சிறப்புத் தேர்வில் 50 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் பெற்ற 906 பேரை அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது. அவர்களின் நியமனம் செல்லாது என, சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், 1,714 பேர் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக, 2008ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறுவோரே நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என்றும் விதிமுறையில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்தவர்களின் பட்டியலை வெளியிடும் போது, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை, தமிழக அரசு 35 சதவீதமாகக் குறைத்தது. இதனால், ஏராளமானவர்கள் பாஸ் ஆகும் நிலைமை உருவானது.



இதை எதிர்த்து தமிழ்நாடு கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.



பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: சிறப்புத் தேர்வு எழுதிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் 1,714 பேரில் 808 பேர் மட்டுமே 50 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எனவே, அவர்கள் மட்டுமே நிரந்தர ஆசிரியர் பணிக்கு தகுதி உடையவர்கள். மீதமுள்ள 906 பேரும் தேர்வில் தோல்வி அடைந்தவர்களாக கருதப்படுவர். எனவே, அரசுப் பள்ளிகளில் அவர்களை நிரந்தரப் பணிக்கு நியமிக்க முடியாது. அதற்கு தகுதியற்றவர்களாக அவர்கள் கருதப்படுவர்.



சிறப்புத் தேர்வில் முதலில் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, அறிவித்த தமிழக அரசு, தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் மாற்றியுள்ளது. இதில் 35 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது எனக் கூறியுள்ளது. தேர்வு நடந்த பின், முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் தான், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு தன்னிச்சையானது, நியாயமற்றது. அதனால், 35 சதவீதமாக குறைத்த தமிழக அரசின் முடிவு ரத்து செய்யப்படுகிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில், தகுதி பெற்ற 906 பேரின் நியமனமும் செல்லாது. இருப்பினும், காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களுக்கு மாநில அரசு புதிதாக தேர்வு நடத்தலாம். ஐகோர்ட்டில் கொடுத்த உறுதி மொழிகளின் அடிப்படையில், இந்தத் தேர்வை நடத்தலாம்.



கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு நடத்திய சிறப்புத் தேர்வில் 35 சதவீதத்திற்கு அதிகமாக, அதேநேரத்தில், 50 சதவீதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள், அரசு புதிதாக நடத்தும் தேர்வில் பங்கேற்கலாம். அவர்கள், பி.எட்., படித்திருக்க வேண்டும் என, கட்டாயப்படுத்தக் கூடாது. இந்த சலுகையும் ஒரே ஒரு முறை மட்டுமே அளிக்கப்பட வேண்டும். அவர்கள் ஏற்கனவே பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்திருப்பதால், இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. தமிழக அரசு புதிதாக நடத்தும் தேர்வை, விளம்பரங்கள் வெளியிட்டு, அதன்மூலம் விண்ணப்பங்கள் பெற்று நடத்தலாம். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கப்படும் நபர்களையும் தேர்வு எழுத அனுமதிக்கலாம். மேலும், இந்தப் பதவிகளுக்கான நியமனத்தில் இடஒதுக்கீடு கொள்கையும் அமலாகும் என்றனர். -தினமலர்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.