About

Thursday 8 April, 2010

ஆசிரியர் தேர்வு வாரிய விடைத்தாள் திருத்துவதில் குளறுபடியா? தேர்வில் பங்கேற்றோர் வேதனை

மதுரை: ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வை எழுதியவர்கள், விடைத்தாள் திருத்தம் செய்ததில் குளறுபடி நடந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்களாக நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 1056 பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க இத்தேர்வு, கடந்த பிப். 14ம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த ஏப். 2ம் தேதி இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்த்தவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். பலர், தாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக குறைவான மதிப்பெண்ணே வழங்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர். இத்தேர்வில் மொத்த மதிப்பெண் 150. சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு வினாக்களுக்கு 110 மதிப்பெண்ணும், பொது அறிவுக்கு 10, கல்வி உளவியல் பாட வினாக்களுக்கு 30 மதிப்பெண்ணும் வழங்கப்படும். இத்தேர்வை பொறுத்தவரை, தேர்வு எழுதி முடிந்ததும் விடைத்தாளின் நகல் ஒன்று அவர்கள் கைவசமே இருக்கும். இதனால் தாங்கள் எழுதிய விடையை அவர்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும். அதன்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு 130 முதல் 140 வரை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு 90 முதல் 100 வரையே கிடைத்துள்ளது.

இத்தேர்வுக்கென பயிற்சி மையங்களில் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து பலர் பயிற்சி பெற்றுள்ளனர். இந்நிறுவனங்களிலும் பலர் எழுதிய விடைத்தாளை காட்டி திருத்தம் செய்திருந்தனர். அவர்களுக்கும் மதிப்பெண் குறைவாகவே வந்துள்ளது. மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ''கணிதபாடத்தில் 110 மதிப்பெண்ணுக்கு மட்டுமே விடைத் தாளை திருத்தியுள்ளனர். மீதியுள்ள 40 மதிப்பெண்ணையும் விட்டுவிட்டனர் என தெரிகிறது. ஏனெனில் கணிதத் தேர்வு எழுதிய பெரும்பாலானோருக்கு அதிகபட்சமே 103 மதிப்பெண் வரைதான் கிடைத்துள்ளது. இதேபோல தமிழ்ப் பாடம் எழுதியவர்களுக்கும் குறைந்த மதிப்பெண்களே கிடைத்துள்ளன,'' என்றார்.

தேர்வெழுதிய மற்றொருவர் கூறுகையில், ''நான் பயிற்சி பெற்ற மையத்தில் விடைத்தாள் மாதிரியை காட்டி திருத்தம் செய்தபோது, 130 மதிப்பெண் வரை கிடைக்கும் என்பதால், மிகுந்த நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் 117 மதிப்பெண்ணே கிடைத்துள்ளது. இதனால் வெறுத்துவிட்டேன். இதேபோல பலர் குறைந்த மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தனர். இதனால் பலர் கோர்ட்டுக்கு செல்லும் முடிவில் உள்ளோம்,'' என்றார்.

THANKS TO :   DINAMALAR

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.