ஆசிரியர் பணி நியமனத்தில், பார்வையற்றவர்களுக்கான 1 சதவீதத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. ஆசிரியர் படிப்பை முடித்த பார்வையற்றவர்களை, பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும், வேலை வாய்ப்பில் பார்வையற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 1 சதவீத நியமனத்தை முழுமையாக அமல்படுத்தி பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும், பார்வையற்றவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. துறைச் செயலர் ராமமோகன ராவ், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ராமையா, உறுப்பினர் - செயலர் வசந்தி மற்றும் சமூக நலத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பில், பார்வையற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1 சதவீதத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் - செயலர் வசந்தி கூறியதாவது : பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் நியமனத்தில், தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டுமே பார்வையற்றவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பிற பாடங்களுக்கு அவர்கள் நியமிக்கப்படுவதில்லை. மொத்த பணி நியமனத்தில், 1 சதவீத இடங்களை மூன்று பாடங்களுக்காக நியமிக்க வேண்டும் என்று பார்வையற்றவர்கள் கேட்கின்றனர். மூன்று பாடங்களில் முழுக்க, முழுக்க இவர்களையே நியமிக்க முடியாது. இதில், பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.இந்தப் பிரச்னையில், தமிழக அரசு என்ன முடிவு எடுக்கிறதோ, அதை, அடுத்து நடைபெறும் ஆசிரியர் நியமனத்தில் அமல்படுத்துவோம். இவ்வாறு வசந்தி கூறினார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.