About

Monday, 20 July 2009

பள்ளிக் கல்வித்துறையில் 12,000 ஆசிரியர் நியமனம் எப்போது: பழைய பட்டியலில் இருந்தே தேர்ந்தெடுக்க முடிவு

பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி, விரைவில் துவங்க உள்ளது. இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களில் ஏற்கனவே ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடித்துவிட்டதால், அந்தப் பட்டியலில் இருந்தே, தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


கடந்த 15ம் தேதி சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, "பள்ளிக் கல்வி இயக்ககத்தில் 6,469 ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 5,166 ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் 165 விரிவுரையாளர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் 258 ஆசிரியர்கள் என, 12 ஆயிரத்து 58 ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டில் நியமனம் செய்யப்படுவர்' என அறிவித்தார்.


இதையடுத்து, துறை வாரியாக தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் துவக்கியுள்ளது. ஏற்கனவே, ஒவ்வொரு துறை வாரியாக புதிய ஆசிரியர்களை தேர்வு செய்தபோது, ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் வேலை வாய்ப்பு இயக்குனரகத்தில் இருந்து பதிவு மூப்பு பட்டியலைப் பெற்று, அதில் முதல் நிலையில் இருந்தவர்களைத் தேர்வு செய்தது. ஐந்து பேரில் ஒருவர் வேலை வாய்ப்பு பெற்றுவிட்ட நிலையில், பதிவு மூப்பு அடிப்படையில் மீதம் நான்கு பேர் இருக்கின்றனர். இவர்களில் இருந்து, பதிவு மூப்புப்படி ஒருவரை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதனால், தேர்வுப் பணிகள் விரைவாக முடியும். இப்படி, துறை வாரியாக தகுதி வாய்ந்த பதிவுதாரர்களின் பெயர்ப் பட்டியலை, அந்தந்த துறைகளிடம் ஒப்படைத்துவிட்டால், அதன்பின் பணி நியமன கவுன்சிலிங் நடக்கும்.


தகுதி வாய்ந்தவர்களைத் தேர்வு செய்யும் பணிகளை ஓரிரு நாளில் துவக்கி, ஆகஸ்ட் 20ம் தேதிக்குள், தேர்வு பெற்றவர்களின் பட்டியலை ஒப்படைப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் இறுதியிலோ அல்லது செப்டம்பர் 10ம் தேதிக்குள்ளாகவோ புதிய ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, பணி நியமன உத்தரவுகளை வழங்குவதற்கு அனைத்து துறைகளும் திட்டமிட்டுள்ளன. கல்வியாண்டு துவங்கி இரண்டு மாதங்கள் முடிய உள்ளன. செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வுகள் வந்துவிடும். அதற்கு முன்னதாக புதிய ஆசிரியர்களை நியமனம் செய்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும்

1 comment:

  1. hi siva
    when is A.E.E.O result??
    any idea???

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.