About

Thursday, 16 July 2009

இந்த ஆண்டு 12,000 ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

                        சென்னை: ""பள்ளிக் கல்வித் துறையில், நடப்பாண்டில் 12 ஆயிரத்து 58 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவர்,'' என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளித்தபோது, அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

பள்ளிக் கல்வி இயக்ககத்தில் 6,469 ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 5,166 ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் 165 விரிவுரையாளர்கள், சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிப் பள்ளிகளில் 258 ஆசிரியர்கள் என, மொத்தம் 12 ஆயிரத்து 58 ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப்படுவர். 831 ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 46 கோடி ரூபாய் செலவில் நாற்காலி, மேஜைகள் வழங்கப்படும். இதன் மூலம், ஆறரை லட்சம் மாணவர்கள் பயனடைவர். அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு ஏதுவாக, குடிநீர் சுத்திகரிப்பு கொள்கலன் வழங்கப்படும்.


பெண் கல்வி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, வாழ்வியல் திறன் பயிற்சி, கல்விச் சுற்றுலா, கல்வி விழிப்புணர்வு பயிற்சிகள் போன்றவை 15 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் கல்வி அறிமுகப்படுத்தப்படும். முதற்கட்டமாக, நடப்பு கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்வி பாடப் புத்தகம் வழங்கப்படும். இத்திட்டம், படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதனால், ஆறு லட்சத்து 55 ஆயிரத்து 614 மாணவ, மாணவிகள் பயனடைவர்.


அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவிகள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர ஊக்குவிக்கும் வகையில், ஒன்பதாம் வகுப்பு பயிலும் 16 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு அவர்களது பெயரில் 3,000 ரூபாய் வங்கியில் வைப்பீடு செய்யப்படும். நடப்பு கல்வியாண்டில் இருந்து இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் பணியாற்றும் 3,000 பட்டதாரி ஆசிரியர்கள், அவர்களது விருப்பத்தின் படி பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றம் செய்ய வழிவகை செய்யப்படும்.


அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், மாவட்டங்களில் சுற்றுச்சூழல் சம்பந்தமான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு முதுகலை ஆசிரியர் (தாவரவியல் - உயிரியல்) வீதம் 32 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர் நிலையில் ஒரு உதவி இயக்குனர் பணியிடமும் ஏற்படுத்தப்படும் - THANKS TO DINAMALAR

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.