About

Tuesday 11 May, 2010

நடுநிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக கல்வித் துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்





அரசு நடுநிலைப்பள்ளிகளில் தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் உடற்கல்வியை வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.





 
அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் இளங்கோவன் தாக்கல் செய்த மனு: ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் தொடக்கப்பள்ளி முதல் அனைத்து பள்ளிகளிலும் உடற் கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். தமிழகத்தில் பல நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், பின் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், உடற் கல்வி ஆசிரியர்களை நியமிக்கவில்லை.


 
நடுநிலைப்பள்ளிகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. உடற்கல்வி ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடங்களில் மட்டும் நியமிக்கின்றனர். இதனால், நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உடற்கல்வியை படிக்கும் வாய்ப்பு பாதிக்கப்படுகிறது.மேல்நிலைப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கு, வாரத்தில் இரண்டு வகுப்புகள் உடற்கல்வி பயிற்சி கட்டாயமாக உள்ளது. 
 
ஒரு வகுப்பு உடற்கல்விக்கும், ஒரு வகுப்பு யோகாசனத்துக்கும் என உள்ளது. ஆனால், நடுநிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. திருவண்ணாமலை மாவட்டத் தில் 1,429 தொடக்கப்பள்ளிகள், 346 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் எந்தப் பள்ளியிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால், மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. அரசு பள்ளிகளில் தொடக்கப்பள்ளி முதல் உடற்கல்வியை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். உடற்கல்வியை கட்டாயமாக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் வரை, மேல்நிலைப்பள்ளிகளில் 143 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன. பணி ஓய்வு பெற்றதன் மூலம், 14 காலியிடங்கள் ஏற்பட்டன.
 
எனவே, அரசு நடுநிலைப்பள்ளிகளில் தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் உடற்கல்வி படிப்பை வழங்க உத்தரவிட வேண்டும். அதன் மூலம் மாவட்ட, மாநில, தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக இந்த நடவடிக்கையை அரசு எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
மனுவை நீதிபதி என்.பால் வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.கோவிந்தராமன் ஆஜரானார். மனுவுக்கு பதிலளிக்கும்படி கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி என்.பால் வசந்தகுமார் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.