About

Tuesday 30 August, 2011

பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் அரசு தெளிவு : இடைநிலை , பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பகுதி நேர பணியிடமாகாது

முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள், 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இதில், ஓவிய ஆசிரியர்கள், தையல், கைவேலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிய, மூன்று பிரிவினர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். 




பள்ளிக்கல்வி அமைச்சரின் விழுப்புரம் மாவட்டத்திற்கு, அதிகபட்சமாக, 1,221 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கும் வகையில், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான பணியிடங்கள், அரியலூர், திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.


பகுதி நேர ஆசிரியர்களாக ஓவிய ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தையல், கை வேலைப்பாடு ஆகிய, மூன்று பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே, தேர்வு செய்யப்பட இருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது. மாணவர்கள், கல்வி கற்பதற்கு தேவைப்படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், தேர்வு செய்யப்படவில்லை. பகுதி நேர பணியில் சேர, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால், இவர்கள் தேர்வு செய்யப்படாதது, அவர்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.


இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறும் போது, "இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள், முறையான அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பணியிடங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களை பணி நியமனம் செய்துவிட்டால், கூடுதல் ஆசிரியர்கள் தேவை இருக்காது. அதனால் தான், பகுதி நேர ஆசிரியர் பட்டியலில், இவர்கள் இடம் பெறவில்லை' என்றனர். மொத்த பணியிடங்களான 16 ஆயிரத்து, 549ல், ஓவிய ஆசிரியர்கள் 5,253 பேரும், உடற்கல்வி ஆசிரியர்கள் 5,392 பேரும், தையல் உள்ளிட்ட ஆசிரியர்கள் 5,904 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 30 மாவட்டங்களுக்கான பணியிட ஒதுக்கீட்டில், அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் விழுப்புரம் மாவட்டத்திற்கு, 1,221 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மட்டுமில்லாமல், கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு, முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, 944 பணியிடங்கள், வேலூர் மாவட்டத்திற்கு, 1,093 பணியிடங்கள், கடலூர் மாவட்டத்திற்கு, 706 பணியிடங்கள், தர்மபுரிக்கு, 535 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.