About

Tuesday 23 August, 2011

14 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமனம்: அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் புதிதாக 14 ஆயிரத்து 377 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார். 

 பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளிக்கும்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:   
         தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி ஆகியவை சிறப்பாக அமையும் வகையில் பள்ளிக் கல்வித் துறையில் 14,377 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,682 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 5,790 பேரும், இடைநிலை ஆசிரியர்கள் 4,342 பேரும், சிறப்பாசிரியர்கள் 1,538 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர். வேளாண் பயிற்றுநர் பணியிடங்களுக்கு 25 பேர் உள்பட மொத்தம் 14,377 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.  1,353 நூலகர்கள்: நூலகங்களைச் சிறப்பாகச் செயல்பட வைக்கும் வகையில் 1,353 நூலகர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். நூலகர் (கிரேடு -3) 260 பணியிடங்களும், ஊரக நூலகர் 1,093 பணியிடங்களும் நிரப்பப்படும்.  831 தலைமையாசிரியர் பணியிடங்கள்: தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால் 6, 7, 8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். நடுநிலைப் பள்ளிகளின் நிர்வாகத்தைக் கவனிக்கவும், கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்பார்வை செய்யவும் பட்டதாரி தலைமையாசிரியர்கள் இந்தப் பள்ளிகளுக்குத் தேவைப்படுகின்றனர்.  எனவே, 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்படும். 

 ஆசிரியரல்லாத 888 பணியிடங்கள்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் அலுவலகப் பணிகளை நடைமுறைப்படுத்திட 344 பள்ளிகளுக்கு தலா ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும், 544 பள்ளிகளுக்கு ஆய்வக உதவியாளர் பணியிடங்களும் மொத்தம் 888 பணியிடங்கள் நடப்பாண்டில் அனுமதிக்கப்படும்.  ஆசிரியர் பணியிடங்கள் தவிர உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நிலையில் 34 பணியிடங்களும், முதுநிலை விரிவுரையாளர் (மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்) 34 பணியிடங்களும் என மொத்தம் 68 பணியிடங்கள் நிரப்பப்படும்.  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றுள்ள அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீதம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகக் கூறினார் சண்முகம்.

நன்றி  : தினமணி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.