About

Sunday, 14 August 2011

அறிவியல், கணித ஆசிரியர்களை போல நடுநிலை பள்ளிகளில் தமிழாசிரியர்களையும் நேரடியாக நியமிக்க வேண்டும் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை

நடுநிலைப் பள்ளிகளில் அறிவியல், கணிதம், ஆங்கில ஆசிரியர்களைப் போல தமிழ், வரலாறு, புவியியல் பாட ஆசிரியர்களையும் நேரடியாக நியமிக்க வேண்டும் என்று வேலையில்லாத பட்டதாரி தமிழாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராக.ராமு, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-



நேரடி நியமனம்

கடந்த பல ஆண்டுகளாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் நிலவி வந்த குறைபாடுகளை களையும் வண்ணம் தமிழ், வரலாறு, புவியியல், வணிகவியல், பொருளாதாரம் படித்தவர்களும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி.தமிழ் பட்டதாரிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையில் தமிழாசிரியர் நியமனங்களை 66 சதவீதம் நேரடி நியமனம், 33 சதவீதம் பதவி உயர்வு என்ற நடைமுறைப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.


6,700 காலி இடங்கள்


தொடக்க கல்வித்துறையில் ஆங்கிலம், அறிவியல், கணித பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று தமிழ், வரலாறு, புவியியல் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும் 50 சதவீதம் நேரடி நியமனம் செய்ய வேண்டும். தற்போது அனைத்து பணி இடங்களுமே பதவி உயர்வு மூலமாக நியமிக்கப்படுவதால் தமிழ், வரலாறு, புவியியல் பட்டதாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 7,200 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6,700 பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை. எனவே, காலியாக உள்ள 6,700 தமிழாசிரியர் பணி இடங்களை நேரடியாக நியமனம் செய்யுமாறு 30 ஆயிரம் தமிழ் பட்டதாரிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு ராமு கூறி உள்ளார்.

நன்றி : தினதந்தி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.