About

Sunday 31 January, 2010

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பதிவு மூப்பில் குளறுபடியால் வேதனை

பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான பதிவு மூப்பில், குளறுபடிகள் உள்ளதால், பதிவுதாரர்கள் வேதனையில் உள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு, பணி நியமனம் செய்வதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம், மாவட்ட வாரியாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பு பட்டியலை கேட்கிறது. இதற்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும், பதிவு மூப்பு உள்ள பட்டதாரி ஆசிரியர்களை நேரில் வரவழைத்து, பதிவு உறுதி செய்த பின், வேலை வாய்ப்பு இணையதளத்தில் பட்டியலை வெளியிடுகிறது.
 பதிவு செய்தவரே நேரடியாக பதிவை உறுதி செய்த பின்னரும், அவரது பதிவு மூப்பு இணையதளத்தில் இல்லை. இதுகுறித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களை அணுகினால், இன்னும் கால அவகாசம் உள்ளது; அதற்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கின்றனர்.
இணையதளத்தில் சமூக அறிவியல் பாடம் இல்லை; சமூக அறிவியல் பாடத்திற்கான பதிவு மூப்பு, சில நாட்களாக வந்து கொண்டிருந்தது. தற்போது முற்றிலுமாக இல்லை. பதிவு மூப்பு உள்ளவர்கள் கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டருக்கும், வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கும் நடையாக நடந்து வருகின்றனர்.
தமிழாசிரியர் பதிவு மூப்பில் குளறுபடி: பட்டதாரி தமிழாசிரியர் பதிவு மூப்பில், வேலை வாய்ப்பு அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் குழப்புகிறது. 2009 செப்டம்பரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பிரிவில், பெண்களுக்கான ஒதுக்கீட்டில் பதிவு மூப்பு 1995 மே 22ம் தேதி என உள்ளது. 2009 டிச., 8ம் தேதி அறிவிப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பெண்களுக்கான ஒதுக்கீட்டில் 1993 செப்., 9ம் தேதி வரை பதிவு மூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு மூப்பு பின்னோக்கி செல்வதால், குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால்,  பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்காக காத்திருப்பவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.