About

Wednesday, 28 April 2010

வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு புகார் எதிரொலி : 'KEY ANSWER' ஐ ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு

வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு விடைத்தாள்கள் சரிவர திருத்தப்படவில்லை என அதிகமான புகார்கள் வந்ததையடுத்து, 'கீ ஆன்சரை' சரிபார்க்க நிபுணர் குழுவை அமைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கையின்படி புதிய, 'கீ ஆன்சரை' வெளியிட தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், சர்வ சிக்ஷ அபியான் திட்டத்திற்காக 1,064 வட்டார வள மைய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வை, கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடத்தியது. இதில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 'அப்ஜக்டிவ்' வகையில், பாடத்திற்கு 110 மதிப்பெண்கள், கல்விக்கு 30 மதிப்பெண்கள் மற்றும் பொது அறிவு 10 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. விடைத்தாள் கள் மதிப்பீடு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்த்தலுக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை, கடந்த 2ம் தேதி, தனது இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தேர்வு முடிவைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மிகச் சரியான முறையில் விடை அளித்தும், எதிர் பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக, கணிதத்தை முக்கிய பாடமாகக் கொண்டு தேர்வெழுதியவர்களுக்கு, 20 முதல் 25 மதிப்பெண்கள் வரை குறைவாக வந்ததாக புலம்பினர். இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நூற்றுக்கணக்கானோர் புகார் தெரிவித்து, தங்களது விடைத்தாள்களை மீண்டும் சரிபார்த்து, முடிவை வெளியிட வேண்டும் என கோரினர். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இந்நிலையில், கேள்விகளுக்குரிய, 'கீ ஆன்சரை' சரிபார்த்து, அறிக்கை வழங்குவதற்காக நிபுணர் குழுவை அமைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 'கீ ஆன்சரை' ஆய்வு செய்யும் பணியில், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் விரைவில், தங்கள் அறிக்கையை, தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க உள்ளனர். அதன்படி புதிய, 'கீ ஆன்சரை' இணையதளத்தில் வெளியிட, தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தினமலர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.