About

Thursday, 9 September 2010

இடைநிலை கல்வி திட்டத்தில் 45,850 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க அரசு திட்டம்

              இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக, 2017ம் ஆண்டுக்குள் 45,850 ஆசிரியர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு பங்களிப்புடன் இடைநிலைக் கல்வித் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.



        
      இதன் முதற்கட்டமாக, தமிழகத்தில் 2009ம் ஆண்டு முதல் 18 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் போல், அனைத்து வசதிகளுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதுஇதையடுத்து, தலா 3 கோடி செலவில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பள்ளிகள் கட்டி முடிக்கப்படும். இதுதவிர, மேலும் 26 பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது.  மேற்கண்ட பள்ளிகளில் 6 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் ஆங்கில வழியில் நடத்தப்படும். இது, ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், இடைநிலை கல்வித் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது இந்த வகுப்புகளில் தரமான கல்வி மற்றும் திறன் மிகுந்த ஆசிரியர்களும் படிப்படியாக நியமிக்கப்படுவார்கள்.

      மேலும், மாணவ மாணவிகள் வசதிக்காக ஒரு பள்ளிக்கும் மற்றொரு பள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 5 கிமீ இருக்கும் வகையில் அமைக்கப்படும். அதன்படி, வரும் 2017ம் ஆண்டுக்குள் 4,263 அரசுப் பள்ளிகளும், 1,327 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 3,765 தனியார் பள்ளிகளும் படிப்படியாக தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பள்ளிகளில் மொழி ஆசிரியர்கள், கணக்கு, அறிவியல், இசை, நாட்டியம், கலை, விளையாட்டு என அனைத்து பாடங்களுக்கும் படிப்படியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

     இப்படி அரசுப் பள்ளிகளில் 32,350 ஆசிரியர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13,500 ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளில் 40,600 ஆசிரியர்களும் படிப்படியாக நியமிக்கப்படுவார்கள். இதற்காக, தமிழக பள்ளிக் கல்வி அதிகாரிகள் மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொண்டு விவரங்களை திரட்டியுள்ளனர். அதை வரைபடமாகவும், புள்ளி விவரப் பட்டியலாகவும் உருவாக்கி, திட்ட முன்வடிவு தயாரித்துள்ளனர். இதில், செலவினங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை, மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி பெறவும், தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. விரைவில், மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

நன்றி   :    தினகரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.