About

Friday, 20 August 2010

வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் தேர்வு மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய, கோர்ட் உத்தரவு

    வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பணிக்கான தேர்வு எழுதிய அனைவரின் விடைத்தாளையும் மறுமதிப்பீடு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 




    தமிழகம் முழுவதும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்களை நியமிப்பதற்காக, விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வரவேற்றது. மொத்தம் 1,064 இடங்கள். இதற்கான எழுத்துத் தேர்வு, கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடந்தது. இதில், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 987 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வுப் பட்டியல் ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சரியான விடைகளுக்கு தவறான மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது, மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் நீதிபதி சந்துரு முன் விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தங்களுக்கு இதுபோன்று முறையீடுகள் வந்துள்ளதாகவும், எனவே, ஆய்வுக் குழுவை நியமிப்பதாகவும் தெரிவித்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி சந்துரு, ஆய்வுக்குழுவின் அறிக்கையைப் பெற்று, பின் "கீ' விடைத்தாளை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வுக்குழுவின் அடிப்படையில் பலரது மதிப்பெண்களில் மாற்றம் செய்யப்பட்டது. புதிய தேர்வுப் பட்டியலை மே மாதம் வாரியம் வெளியிட்டது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

    முதலாவதாக வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்த 391 பேர், புதிய பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே, முதல் பட்டியல் அடிப்படையில் தான் தேர்வு செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். நிபுணர் குழுவை அமைத்து, கீ விடைத்தாளை சரிபார்த்து, அதன்படி அனைத்து மாணவர்களின் விடைத்தாளையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என சிலர் கோரினர். இவ்வாறு, 85 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் சீனியர் வக்கீல் சி.செல்வராஜ், வக்கீல் வி.ஆர்.ராஜசேகரன் உள்ளிட்ட வக்கீல்கள், அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் சங்கரன், அரசு வக்கீல் ரவிகுமார் ஆஜராகினர். நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: சில கேள்விகளில் தவறு இருப்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. தேர்வுப் பட்டியலில் மீண்டும் மாற்றம் செய்யவும் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.
  
    எனவே, கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தவர்கள் மட்டுமல்லாமல், தேர்வு எழுதிய அனைவரின் விடைத்தாளையும் மறுமதிப்பீடு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடப்படுகிறது. கோர்ட் எடுத்துள்ள முடிவுப்படி, இந்த மறுமதிப்பீட்டை செய்ய வேண்டும். (ரசாயன பாடத்தில் மூன்று கேள்விகள், வரலாற்றில் இரண்டு, கல்வியியலில் இரண்டு, கணிதத்தில் ஒன்று என மொத்தம் எட்டு கேள்விகளுக்கு மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்) மறுமதிப்பீட்டை செய்து, அடுத்த தேர்வுக்கான பட்டியலை இரண்டு வாரங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். றெமாத்தம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 987 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரின் விடைத்தாளும் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

நன்றி   :  தினமலர் 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.