About

Wednesday 23 June, 2010

நியமன ஆணையை எதிர்பார்க்கும் பட்டதாரி ஆசிரியர்கள்: காலிப் பணியிடங்களால் கல்வித்தரம் பாதிப்பு

ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வுசெய்யப்பட்ட 1,122 பேர் பல மாதங்களாகப் பணி நியமன ஆணையை
எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  

         பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வி மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறையில் 2007-08,2008-09-ம் கல்வி ஆண்டுகளில் காலியாக இருந்த 1,122 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பு அடிப்படையில் தகுதியானோரைத் தேர்வு செய்து நிரப்ப அரசு உத்தரவிட்டது.  இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்விஅலுவலர்கள் தலைமையில் இந்தக் காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு 2009-ம் ஆண்டு நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு மீண்டும் 2009-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.  பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதியான 1,122 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஆணை கடந்த மார்ச் மாதம் முதல் வாரம் வழங்கப்பட்டுள்ளது.  இதில் பள்ளிக் கல்வித் துறையில் காலிப் பணியிடங்களுக்கு 425 பேருக்கும், தொடக்கக் கல்வித் துறையில் 673
பேருக்கும், ஆதிதிராவிடர் நலத் துறையில் 24 பேருக்கும் ஒதுக்கீடு
செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கு ஆணை வழங்கி 4
மாதங்களாகியும் இதுவரை பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படவில்லை. 
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களது வேலையை ராஜிநாமா செய்துவிட்டு நியமன ஆணையை எதிர்பார்த்துள்ளனர்.  பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் காலியாக உள்ள 6,332 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.  இதில் மொத்தம் 6,332 பணியிடங்களுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.  விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததால் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே காலதாமதம் இன்றி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆணை பெற்று 4 மாதங்களாகக் காத்திருக்கும் 1,122 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கவும், மே மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து
கொண்டவர்களில் தகுதியானோர் பட்டியலை விரைவில் வெளியிட்டு பணி நியமன உத்தரவுகளை வழங்கவும் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


நன்றி   : தினமணி


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.