சென்னை, ஜூலை 6: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஷிஃப்ட்-2 பிரிவில்
கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இவ்வாறு நியமிக்கப்படுபவர்களுக்கான ஊதியத்துக்கான நிதியையும் தமிழக
அரசு ஒதுக்கி, அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 62 கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஷிஃப்ட்-2 கல்வி முறை அறிமுகம்
செய்யப்பட்டது.
இதில் பி.எஸ்சி. கணிதம், பி.காம்., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட
பல்வேறு படிப்புகள் முதலில் சுயநிதி படிப்புகளாக வழங்கப்பட்டு பின்னர் அரசு உதவி
பெறும் படிப்புகளாக மாற்றப்பட்டன.
இந்த ஷிஃப்ட்-2 படிப்புகள் அனைத்திலும் ஆரம்பம் முதல் கௌரவ விரிவுரையாளர்களே
நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு, தகுதிவாய்ந்த
முழுநேர உதவி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று சென்னை
உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் உத்தரவிட்டது.
அப்போது பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அறிவித்துள்ள கல்வித் தகுதியில்
போதிய நபர்கள் இல்லை, எனவே கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில்
கோரப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்திக்கொள்ள
ஓராண்டுக்கு அனுமதி அளித்தது. இந்த கால அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு
வந்ததைத் தொடர்ந்து, 31-3-2011 அன்று ஷிஃப்ட்-2 பிரிவில் பணிபுரிந்த கௌரவ
விரிவுரையாளர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்தப் பணியிடங்கள் இதுவரை
நிரப்பப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 15-ம் தேதி கல்லூரிகள்
அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் ஷிஃப்ட்-2 பிரிவுக்கு
விரைந்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு
கோரிக்கைவிடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து மாணவரின் நலனைக் கருத்தில் கொண்டு,
கல்லூரிகளில் ஷிஃப்ட்-2 பிரிவில் கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. ஜூலை 5-ம் தேதி வெளியிட்ட அரசாணையில் இதற்கான உத்தரவை அரசு
பிறப்பித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
கல்லூரி கல்வி இயக்குனர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளில் ஷிஃப்ட்-2 பிரிவில் 2011-12 கல்வியாண்டுக்கு 1,661 கௌரவ
விரிவுரையாளர்களை, ரூ. 6,000 தொகுப்பூதியத்தில் நியமித்துக்கொள்ள அனுமதி
அளிக்கப்படுகிறது.
இந்தப் பணியிடங்களை கடந்த 2010-11-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளையே
பின்பற்றி நிரப்பிக்கொள்ளலாம். இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 6,000 வீதம் 10
மாதங்களுக்கு ரூ. 9 கோடியே 96 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யவும்,
ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு உழைப்பு ஊதியம் வழங்குவதற்கு ரூ. 32 லட்சத்து 50
ஆயிரத்து 800 ஒதுக்கீடு செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமனி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.