About

Thursday 23 June, 2011

தி.மு.க., அரசு அறிவித்த 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் கேள்விக்குறி !!!

கடந்த, பிப்ரவரி 26ம் தேதி, கருணாநிதி, "965 தனியார் பள்ளிகளுக்கு அரசு மானிய உதவியுடன், 4,851 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும், ஜூன் 1ம் தேதியிலிருந்து அனுமதிக்கப்படும் என்றும், 1990-91 வரை துவங்கப்பட்ட, 476 சிறுபான்மை மற்றும் 467 சிறுபான்மை அல்லாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் (அரசு உதவிபெறும் பள்ளிகள்), கூடுதலாக தேவைப்படும், 6,456 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்படும்' என்றும் அறிவித்தார்.



இந்த இரு வகைகளிலும், 331 கோடி ரூபாய் செலவில், 11 ஆயிரத்து, 935 ஆசிரியர்களை நியமனம் செய்ய, முந்தைய அரசு அனுமதி அளித்தது. கருணாநிதி அறிவித்ததும், 965 தனியார் பள்ளிகளை அடையாளம் காணவும், 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கும் பணிகளும், பள்ளிக் கல்வித்துறையில் மின்னல் வேகத்தில் துவங்கின. ஆனால், அதற்குள் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால், இப்பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒவ்வொரு வகை ஆசிரியர் நியமனத்திற்கும் ஒவ்வொரு, "ரேட்' வைத்து பணம் வசூலித்த பிறகே, பணி நியமனம் நடக்கிறது. இந்த வகையில், 12 ஆயிரம் ஆசிரியர் பணி நியமனங்கள் மூலம், பல லட்சம் ரூபாய் கல்லா கட்டுவதற்கு, தனியார் பள்ளிகள் போட்டி போட்டன. நிதி உதவி பெறும் பள்ளிகளின் பட்டியலில் தங்களது பள்ளிகளை சேர்க்க, தனியார் பள்ளி நிர்வாகிகள் பல்வேறு முயற்சிகளை எடுக்கத் துவங்கிய நிலையில், இத்திட்டம் அப்படியே நின்றுபோனது.

தற்போதைய நிலை குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி கூறும்போது, "முன்னாள் முதல்வர் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த வேகமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக, அரசாணைகளும் வெளியிடப்பட்டன. ஆனால், தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டது. இன்று வரை அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. முந்தைய அரசு அறிவித்த இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை' என்றார். உதவிபெறும் பள்ளிகளில், தனியார் பள்ளிகளின் பெயரை சேர்ப்பதற்காகவும், ஆசிரியர் பணியிடங்களை ஒதுக்குவதற்காகவும், பல இடங்களில், "அட்வான்ஸ்' வேட்டை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், முந்தைய அரசின் அறிவிப்பு கைவிடப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் பணி நியமனம் மூலம், பெரும் தொகையை வசூலிக்க திட்டமிட்டிருந்த தனியார் பள்ளிகளுக்கு, தமிழக அரசு, "செக்' வைத்துள்ளது.

நன்றி : தினமலர்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.