About

Tuesday, 27 December 2011

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கானதகுதி தேர்வை தடை செய்யக் கோரி மனு

சென்னை:பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதி தேர்வு நடத்த, தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து பி.டி., மற்றும் முதுகலை, பி.எட்., பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரத்தினகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:
வேலை வாய்ப்பகத்தில், மாநில அளவிலான சீனியாரிட்டிபடி, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், 5,932 ஐ நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, அரசு அனுமதியளித்து, கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. எனவே, அந்த, 5,932 காலியிடங்களையும், அப்போது இருந்த விதிகளின்படி நிரப்ப வேண்டும்.

கடந்த ஜூன் 1ம் தேதி வரையிலான பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களையும், அப்போதைய விதிகளின்படி நிரப்ப வேண்டுமென, தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த மாதம், 8ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம், நியமனங்களை மேற்கொள்வது என, முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விவரங்களையும் அரசு வெளியிட்டது.

ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு மூலமே இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என, கல்வி பெறும் உரிமை சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட சீனியாரிட்டிபடி, இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது என, அரசு முடிவெடுத்தது. பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை, எழுத்துத் தேர்வு மூலமே தேர்வு செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து, 20 ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம். வேலைவாய்ப்பக சீனியாரிட்டிபடி நியமிக்கப்படுவோம் என நம்பியிருந்தோம். தற்போது எங்களுக்கு மறுக்கப்படுகிறது.எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதி தேர்வு அல்லது போட்டி தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்தக் கூடாது என, உத்தரவிட வேண்டும்.

வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில், எங்கள் சங்க உறுப்பினர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி சுகுணா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜரானார். மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசு மற்றும் பள்ளி கல்வித் துறைக்கு, நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சுகுணா உத்தரவிட்டார். 

நன்றி : தினமலர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.