"தமிழகம் முழுவதும் நடப்பாண்டுக்குள் 12 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன' என, ஈரோட்டில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவர் கூறியதாவது:நடப்பாண்டு இறுதிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 12 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். தற்போது, அருந்ததியினர் (தாழ்த்தப்பட்ட) இடஒதுக்கீட்டில் ஆசிரியர்கள் பணியமர்த்த அரசு அனுமதித்துள்ளது. இவர்களுக்கு, தமிழக முதல்வரின் உத்தரவின்படி முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான கணக்கிடும் பணி தற்போது துவங்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் 1,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யும் போது மாணவர்களின் படிப்பு பாதிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, இதுகுறித்து மாநிலம் முழுவதும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக கல்வித்துறைக்கு வேண்டிய உதவிகள் செய்யப்படும். காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதற்கு முன் தெரியவரும். அரசானது, தேர்வாணையம் மூலமாக இந்த காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து திட்டமிட்டு வருகிறது.வளர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க சமச்சீர் கல்வி உருவாக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு வரும் ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட உள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தயாரிக்கும் பணி இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவடைந்து விடும். சமச்சீர் கல்வியில் "வரைவு பாடத்திட்டம்' அமைக்கப்படவுள்ளது.இதுகுறித்த விவரங்கள் இணையதளம் மூலமாக வெளியிடப்படும்.தமிழகம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் கண்டிப்பாக தலா ஐந்து ஆசிரியர்கள் கூடுதலாக நியமிக்கப்படவுள்ளனர்.இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.