About

Saturday, 7 June 2014

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் இந்த ஆண்டு ஆள்குறைப்பு இல்லை

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில்
இந்த
ஆண்டு ஆள்குறைப்பு செய்யப்படாது என
அந்தத் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில்
நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த
டிசம்பர் மாதம் 385 வட்டார வள மைய
மேற்பார்வையாளர்கள் பள்ளிக் கல்வித்
துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான
வட்டார வள மைய பயிற்றுநர்கள்
இப்போது பணியாற்றுகின்றனர். இவர்கள்
இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்
துறைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக
தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக அனைவருக்கும்
கல்வி இயக்க திட்ட அதிகாரிகள் கூறியது:
தமிழகத்தில் வட்டார வள மைய
பயிற்றுநர்களுக்கு சில மாவட்டங்களில்
பற்றாக்குறை உள்ளது. சில மாவட்டங்களில்
தேவைக்கும் அதிகமான வட்டார வள மைய
பயிற்றுநர்கள் உள்ளனர்.
தேவைக்கும் அதிகமாக உள்ள வட்டார வள
மைய பயிற்றுநர்களை மட்டும்
பற்றாக்குறை உள்ள
மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதம் பேர்
மட்டுமே மாவட்டத்திலிருந்து
மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவர்.
முறைப்படி கலந்தாய்வின் மூலமாக
அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவர் என்றார்
அவர்.
ரூ.3 ஆயிரம் கோடி தேவை:
தமிழகத்தில் நடப்பாண்டில் அனைவருக்கும்
கல்வி இயக்கக திட்டத்தைச் செயல்படுத்த
ரூ.3 ஆயிரம் கோடி தேவை என திட்ட
மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில்
எவ்வளவு நிதி தமிழகத்துக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது என்பதை மத்திய
அரசு தெரிவிக்கவில்லை என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 1
முதல் 8-ஆம்
வகுப்பு வரை மாணவர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும் பல்வேறு திட்டங்கள்
செயல்படுத்தப்படுகின்றன.
மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல்,
புதிய கற்பித்தல் முறைகளில்
ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்குதல்,
பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும்
இடைநிற்கும் குழந்தைகளை பள்ளிகளில்
சேர்த்தல், பள்ளிகளில்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்
உள்ளிட்ட பல்வேறு பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக
ஒவ்வொரு வட்டார அளவில் 10 முதல் 15
பட்டதாரி ஆசிரியர்கள் வட்டார வள மைய
பயிற்றுநர்களாகப்
பணியாற்றி வருகின்றனர். அனைவருக்கும்
கல்வித் திட்டப்
பணிகளை மேற்கொள்வதற்காக வட்டார வள
மைய மேற்பார்வையாளர்களும் இருந்தனர்.
கடந்த ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்க
திட்டத்துக்குப் போதிய
நிதி ஒதுக்கீடு செய்யாததால் வட்டார வள
மைய மேற்பார்வையாளர்கள் 385 பேர்
பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம்
செய்யப்பட்டனர்.

Tuesday, 14 January 2014

டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய நெருக்கடி: டி.ஆர்.பி., உத்தரவால் அதிருப்தி

மதுரை:ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ள நிலையில், இளங்கலை பட்டப் படிப்பில், 'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, ஆக.,17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தன. இதில், தாள் ஒன்றில், 12,596 பேரும், தாள் 2ல், 14496 பேரும் தேர்ச்சி பெற்றனர். வினாக்கள் தெளிவாக இல்லாததால் ஏற்பட்ட குழப்பம் அடிப்படையில், பலர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இதில், தாள் 2ல், 2ஆயிரத்திற்கும் மேல், கூடுதலாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். இவர்களை லோக்சபா தேர்தலுக்கு முன் பணிநியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பை அறிவித்தது.பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களாக, 'இளங்கலை பட்டப்படிப்பில், பல்கலை, கல்லூரிகள் வழங்கிய, செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றிதழ்களையும், பட்டப்படிப்பு சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளிக்கப்படாத சான்றுகள் அதற்குப்பின் ஏற்கப்படமாட்டாது,' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை அரசு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பட்டப் படிப்பின் தொகுப்பு மதிப்பெண் சான்று மட்டுமே கேட்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கேட்டு, டி.ஆர்.பி., அதிர்ச்சி ஏற்படுத்தியது. 1980 மற்றம் 1990களில் ரெகுலர் அல்லது தொலை நிலைக் கல்வியில் பட்டம் பெற்றோர், 80 சதவிகிதத்திற்கும் மேல், இதுபோன்ற செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றுகளை வைத்திருக்க வாய்ப்பில்லை. டி.ஆர்.பி.யின் இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்கள் கூறியதாவது: பொதுவாக அரசுப் பணிகளுக்கும் டிகிரி சான்று மற்றும் மதிப்பெண் சான்று மட்டும் கேட்பது வழக்கம். கடந்த டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இதே வழக்கம் தான் கடைபிடிக்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்றுகள் கேட்கப்பட்டுள்ளன, குழப்பமாக உள்ளது. 6வது செமஸ்டருக்கான சான்றே வழங்கமாட்டார்கள். 'டூப்ளிகேட்' சான்றிதழ் கேட்டு, கல்லூரிக்கு சென்றால், சம்பந்தப்பட்ட பல்கலையில் கேளுங்கள் என்கின்றனர். பல்கலைக்கு சென்றால், மீண்டும் அந்த சான்றிதழ் வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட சான்றிதழின் ஜெராக்ஸ் வேண்டும். ஒரு செமஸ்டர் சான்றுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். சான்று காணாமல் போனதாக போலீஸ் எப்.ஐ.ஆர்., வேண்டும் என, ஒரு மாதத்தில் நடக்க சாத்தியமில்லாத வழிகளை கூறுகின்றனர். தேர்ச்சி பெற்றும் நிம்மதி இல்லை. அரசு இப்பிரச்னையில் தலையிட்டு, தெளிவுபடுத்த வேண்டும், என்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் வென்றவர்கள் சான்று சரிபார்ப்பு பணி : ஜன., 20 முதல் 27 வரை நடக்கிறது

விருதுநகர்: ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஜன.,20 முதல் 27 வரை நடக்கிறது.

தமிழகத்தில், கடந்த ஆண்டு ஆக., 17,18 தேதிகளில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக, ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. தேர்ச்சி பெற்றோர் விபரம், சமீபத்தில் வெளியானது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஜன., 20 முதல் 27 வரை, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில், முதன்மைக்கல்வி அதிகாரிகள் தலைமையில் நடக்கிறது. ஜன.,20 முதல் 22 வரை முதல் தாளில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும், 23 முதல் 27 வரை (ஜன.,26 குடியரசு தினம் தவிர) 2ம் தாளில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசியர்களுக்கும் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடக்கிறது.

மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, இடம் குறித்த தகவல், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும். அதன்படி, பங்கேற்பவர்கள் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களுடன் வர வேண்டும். இதை சரிபார்க்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சரிபார்ப்பு முடிந்து, "சீனியாரிட்டி லிஸ்ட்' தயாரிக்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படும். இவர்களுக்கான பணி நியமன ஆணை, முதல்வர் ஜெ., கையால், சென்னையில், பிப்., 2 வது வாரத்தில் வழங்கப்பட உள்ளது,'' என்றார்.

Monday, 13 January 2014

வாசிப்பு திறனை மேம்படுத்துங்கள் : ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு உத்தரவு

காரைக்குடி: மாணவர்களிடம் "வாசிப்பு திறன்' குறைந்து வருவதால், அதை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் அடிப்படை, கட்டட வசதிகள், மாணவர்களுக்கு தேவையான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்ட நிலையில், வட்டார மேற்பார்வையாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பணியை, ஆசிரியர் பயிற்றுனர்களின், சீனியர் பொறுப்பில் இருப்பவர்கள், கூடுதலாக கவனித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், தற்போது, பள்ளிகளின் மாணவர்களின் தரத்தை அறியும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது; பள்ளிகளில், மாணவர்களின் வாசிப்பு திறன் 50 சதவீதம் வரை தான் உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் பணியாற்றும், ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளிகள் வாரியாக சென்று, மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறனை பரி
சோதித்து, 100 சதவீதம் வாசிப்பு, எழுதும் திறனை உருவாக்குமாறு, கூறியுள்ளனர். பொங்கல் முடிந்த பின், நிதி ஒதுக்கீடுபெறப்பட்டு, புதிய பணிகள் தொடங்க வாய்ப்புகள் உள்ளன, என்றார்.

நன்றி   : தினமலர்

Saturday, 31 March 2012

ஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம்: இனி ஒரே தேர்வு தான்!

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

"ஒரே ஒரு தேர்வு தான்; தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆசிரியர் தேர்வு முறை கொள்கையில், தமிழக அரசு திடீரென மாற்றம் செய்துள்ளது, தேர்வு எழுத உள்ளவர்களை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு முன் வரை, "இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருமே, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும்; இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், மற்றொரு போட்டித் தேர்வை நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் என, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.

புதிய அரசாணை விவரம்:கொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:*கடந்த ஆண்டு நவ., 15ம் தேதியிட்ட அரசாணை குறித்து, தெளிவுரை வழங்கும் வகையில், இந்த அரசாணை வெளியிடப்படுகிறது.
*இதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறை கொள்கையை, தமிழக அரசு மாற்றியுள்ளது. இவர்களுக்கான போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற பெயரில் நடக்கும்.
*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இன சுழற்சி முறை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்கும்.
*இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், மாநில அளவிலான வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே, தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பு புதிதல்ல...:இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ""ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற, போட்டித் தேர்வு மூலம் தான், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, கடந்த நவம்பர் 15ம் தேதியிட்ட அரசாணையிலேயே கூறப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிய அறிவிப்பு இல்லை,'' எனத் தெரிவித்தனர். இருப்பினும் இது செயல்பாட்டிற்கு வரவில்லை.இரு தேர்வுகளை நடத்துவது கடினமாக இருக்கும் என்றும்; ஆசிரியர் தகுதித் தேர்வையே, முக்கிய தேர்வாகக் கருதி, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும்; பல தரப்பினரும் வலியுறுத்தி வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில், தெளிவான விளக்கம் கேட்டு, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி, திருச்சியில், சில ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும், ஆசிரியர்களும், அமைச்சர் சிவபதியை சந்தித்து, இரு வகையான தேர்வு முறைகள் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு, ""விரைவில் நல்ல அறிவிப்பு வரும்,'' எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தான், சட்டசபையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதிப்பெண்கள் தான் முக்கியம்:இந்த அரசாணை குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். பதிவு மூப்பு அடிப்படையில், அவர்கள் தேர்வு செய்யப்படுவர்.பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, டி.இ.டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் வாங்கினாலேயே, அவர்களுக்கு வேலை உறுதி எனக் கூற முடியாது. இவர்களில், அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே, இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.

கால அவகாசம் நீட்டிப்பு:கடந்த 22ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும், டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்., 4ம் தேதியுடன், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி முடிகிறது.இந்நிலையில், ஆசிரியர் தேர்வுக்கு, டி.இ.டி., தேர்வையே பிரதான தேர்வாக தமிழக அரசு அறிவித்திருப்பதால், இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் கூட, இனி விண்ணப்பிப்பர். எனவே, அனைவரும் விண்ணப்பம் செய்ய, போதுமான கால அவகாசம் வழங்க, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.அதன்படி, விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள், ஏப்., 10 அல்லது 12ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் 2ம் தேதிக்குள் வெளியாகும்.

 நன்றி : தினமலர்